பழிக்குப் பழி கொலையால் வாழ்வின் 17 ஆண்டுகளைச் சிறையில் கழிக்கிறான் ராக்கி. எல்லாம் முடிந்ததென வெளியே வருபவனுக்கு, எதுவும் முடியவில்லை என வாழ்க்கை கோடாரியால் புற மண்டையில் விளாசுகிறது. ஒதுங்கி ஓடுபவன் ஒரு ரகம்; ஓங்கித் திருப்பி அடிப்பவன் ஒரு ரகம். ராக்கி இரண்டாம் ரகம் என்பதால் ஓங்காரக் கூச்சலுடன் ரத்தம் தெறிக்கத் தெறிக்க ரத்த சகதியில் அடுத்த அடுத்த காட்சிகள் நகர்கின்றன.
'கொழந்த மூஞ்சிடா இது' என்கிற அடியாளின் நக்கல் சிரிப்புடன் ஒரு காட்சியில் அறிமுகமாகிறார் வசந்த் ரவி. நமக்குமே கொஞ்சம் அது சரியெனத் தோன்றும் சில நிமிடங்களில் சரிந்து விழுகின்றன உடல்கள். அடுத்தடுத்து நடப்பதெல்லாம் ரத்த சரித்திரம்தான். பழிவாங்கலில் தனி ருசி கண்ட மணிமாறன் கதாபாத்திரத்தில் பாரதிராஜா. இத்தனை ஆண்டுக்கால அனுபவமும், பாரதிராஜாவின் குரலும் அந்தக் கதாபாத்திரத்துக்கு அவ்வளவு வலு சேர்க்கிறது. சில காட்சிகளே வந்தாலும், குருதி படிந்த ஓவியமாய் மனதில் பதிகிறார் ரவீணா ரவி. பூ ராமு, ரோஹினி எனப் படத்தில் வரும் சின்ன சின்ன கதாபாத்திரங்களும், கதையின் சுவாரஸ்யத்துக்குத் துணையாய் நிற்கிறார்கள்.
படத்தின் கதையை ஒரு வரிக்குள் சொல்லிவிடலாம். நாம் இதற்கு முன்பு பார்க்காத கதையா என்றால், பார்த்துப் பார்த்துச் சலித்துப் போன ரிவெஞ்ச் கதைதான். ஆனால், 'நான் லீனியர்' கதை சொல்லல் பாணி, அத்தியாயங்களின் வழி நகரும் காட்சிகள், அதற்கென தேர்ந்தெடுத்த சொல்லாடல்கள், சமரசமில்லாத வன்முறை என வேறு தளத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் அருண் மாதேஸ்வரன். 'Kill Bill' தொட்டு தற்போது உலக கவனம் பெற்றிருக்கும் 'The Worst Person In The World' வரை சில படங்களில் இந்த எபிசோடு பாணியிலான கதை சொல்லல் இருந்தாலும், தமிழுக்குப் புதிய வரவாய் இருப்பதால் வசீகரிக்க வைக்கிறது.
நடந்த கதைக்கு ஒரு நிறம், நடக்கவிருப்பதற்கு ஒரு நிறம். வித்தியாசமான கோணங்கள் என ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவுக்கு இதில் கூடுதல் பணி. அதைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். மாண்டேஜ் வழி இசைக்கும் பாடல்கள் பெரிய அளவுக்குக் கைகொடுக்கவில்லை என்றாலும், பின்னணி இசையில் காட்சிகளின் அதிர்வுகளை நமக்குக் கடத்துகிறார் தர்புகா சிவா.
அதே சமயம், வன்முறைக் காட்சிகளில் இருக்கும் அடர்த்தி, எமோஷனல் காட்சிகளிலும் சற்று இருந்திருக்கலாம் என்கிற நெருடலும் இல்லாமல் இல்லை. அதனாலேயே பெரிய மரணங்களும், பெரிய பாதிப்புகளைக் கடத்தத் தவறுகின்றன. அதேபோல், கதை சொன்ன விதத்தைவிடுத்து சற்று தள்ளி நின்று 'ராக்கி'யை ஆராய்ந்தால், அது வழக்கமானதொரு பழிக்குப் பழி வாங்கல் கதையாக மட்டுமே தன் வெளியைச் சுருக்கிக் கொள்கிறது. மேக்கிங்கிற்காக மெனக்கெட்டவர்கள், கதை சொல்லல் பாணிக்காகச் சிரத்தை எடுத்தவர்கள், கொஞ்சம் கதைக்கருவையும் வித்தியாசமாக யோசித்திருக்கலாம். ஒரு பரபர ஆக்ஷன் கதையில் திருப்பங்களே இல்லாமல் போனதும் மைனஸ்! கடைசியில் வரும் அந்த சின்ன சர்ப்ரைஸ்கூட 'கைதி'யை நினைவுபடுத்திச் செல்கிறது.
Post a Comment