கொரோனா பீதியில் இருக்கும் மக்கள் திரையரங்குகளுக்கு வருவார்களா என்ற சந்தேகம் நிலவிய காலகட்டத்தில் மாஸ்டர் திரைக்கு வந்தது. முதல்நாளிலேயே கூட்டம் அலைமோதியது. விளைவு... விஜய்யின் திரை வரலாற்றில் மாஸ்டரின் வசூல் முதலிடத்தைப் பிடித்தது.



கார்த்தியின் சுல்தான் அக்மார்க் தெலுங்கு கரமசாலாவாக இருந்தும், தமிழக திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி லாபத்தை குவித்தது. நேற்று வெளியான கர்ணன் மற்ற இரு படங்கள் போலன்றி விமர்சன ரீதியாகவும் பாராட்டை பெற்றுள்ளது. வசூலிலும் கர்ணன் சாதனை படைத்திருப்பது தான் முக்கியமானது.

பாலாஜி சினிமாஸ் போன்ற சில திரையரங்குகளில் ரசிகர்களின் வேண்டுகோள் காரணமாக அதிகாலை ஒரு மணிக்கே சிறப்புக் காட்சி போடப்பட்டது. பல திரையரங்குகள் ஐந்துக்கும் மேற்பட்ட காட்சிகளை திரையிட்டன. திருநெல்வேலி - கன்னியாகுமரி ஏரியாவில் மட்டும் நேற்று ஒருநாளில் 80 லட்சங்களை கர்ணன் வசூலித்துள்ளது. தனுஷ் படங்களில் இதுவே அதிகபட்சம்.


தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 10.39 கோடிகளை இப்படம் வசூலித்திருப்பதாக உள்வட்டார தகவல்கள் கூறுகின்றன. தனுஷ் படம் ஒன்று முதல் நாளில் 10 கோடியை கடப்பது இதுவே முதல்முறை. அந்தவகையில் கர்ணன் முதல்நாள் தமிழக வசூலில் பட்டையை கிளப்பி சாதனை படைத்துள்ளது. இன்று முதல் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இந்த கட்டுப்பாட்டை கடந்து கர்ணன் லாபத்தை அள்ளித் தரும் என்ற நம்பிக்கை அனைத்து தரப்பினருக்கும் உள்ளது.

Post a Comment

Previous Post Next Post